தமது மகன் கலந்துகொள்ளும் பனிச்சறுக்குப் போட்டியைக் காண, சுமார் ஒரு ஆண்டு காலம் இருபது நாடுகளைக் கடந்து 17 ஆயிரம் கிலோமீற்றர் சைக்கிளில் பயணம் செய்த பெற்றோர், பொருத்தமான நாளில் பியோங்சாங் நகரை அடைந்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

தென் கொரியாவில் பியோங்சாங் என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த மிஸ்சா கேசர் என்ற வீரர் கலந்துகொண்டார். அவரது பனிச்சறுக்கு விளையாட்டைக் கண்டு ரசிக்க அவரது தந்தை குய்டோ ஹுவீலர் (55), வளர்ப்புத் தாய் ரீட்டா ரியூடிமான் (57) ஆகியோர் சைக்கிள் பயணமாக தென் கொரியாவின் பியோங்சாங் சென்றடைந்தனர்.

சுவிற்சர்லாந்தின் சூரிச்  உள்ள ஓல்டன் நகரில் இருந்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைக்கிள் பயணமாக தென்கொரியா நோக்கிப் புறப்பட்ட இவர்கள், ஓராண்டு காலம், 20 நாடுகள் வழியாக 17 ஆயிரம் கிலோ மீற்றர்  தூரம் பயணம் செய்து பியொங் சாங் நகரை அடைந்து, அங்கு தங்களது மகனின் பனிச்சறுக்கு சாகச விளையாட்டை கண்டு ரசித்தனர். 

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்களது சைக்கிள் பயணம் கடுமையான சவால் நிறைந்ததாக இருந்தது. மத்திய ஆசிய நாடுகளைக் கடக்க 4 ஆயிரம் மீற்றர் உயரமான மேடுகளைக் கடக்க வேண்டியிருந்தது. இதனால் மிகவும் களைப்படைந்தோம் எனத் தெரிவித்தனர்.

எனினும், எதற்காக இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள் என்பது குறித்து தகவல்கள் இல்லை.