அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இ20 கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், இ20 வரலாற்றிலேயே அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து சாதனை வெற்றிபெற்றது.

ஒக்லாந்தில் நடைபெற்ற 5ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் 2ஆவது முறையாக பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

4.4 ஓவரில் 50 ஓட்டங்களைர் தொட்ட நியூஸிலாந்து, 9.2 ஓவரில் 100 ஓட்டங்களைப் பெற்றது.

இருபது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களைக் குவித்தது.

244 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலியாவின் வோர்னர், டி'ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 121 ஓட்டங்களைக் குவித்தது. 

இறுதிக் கட்டத்தில், 20 பந்தில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. எனினும், அதிரடி காட்டிய ஆஸி. வீரர்கள் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்களைப்பெற்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இ20 கிரிக்கெட் வரலாற்றில் 243 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிய முதல் அணி என்ற வரலாற்று பெருமையை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 

இதற்கு முன் தென்னாபிரிக்காவிற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 236 ஓட்டங்களையும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 230 ஓட்டங்களையும் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியடைந்துள்ளன.