சர்ச்சைக்குரிய காணொளி மற்றும் புகைப்படப் பதிவுகளை நீக்காதவிடத்து, பிரபல சமூக வலைதளங்களான ‘யூட்யூப்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகியனவற்றை தடை செய்யப்போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

வ்ளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தில் உதவிப் பிரதமராகப் பதவி வகிக்கும் சேர்ஜி ப்ரிக்கோத்கோவும் க்ரெம்ளினின் முக்கிய தொழிலதிபரும் பெரும் கோடீஸ்வரருமான ஒலெக் தெரிபாஸ்க்காவும் உல்லாசக் கப்பல் ஒன்றில் மொடல் அழகிகளுடன் இருந்த காணொளிப் பதிவு ஒன்று, 2016ஆம் ஆண்டு யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியானது.

குறித்த பிரமுகர்களுடன் இருந்த அழகி ஒருவரே அந்தப் பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் தரவேற்றியிருந்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்தச் சந்திப்பு நடந்திருந்தது. இதையடுத்து, ட்ரம்ப்பை ஜனாதிபதியாக்குவதற்கான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பு நிமித்தமான சந்திப்பே இது என்று, ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினரான அலெக்ஸி நவல்னி கடும் எதிர்ப்பைக் கிளப்பினார்.

“அரசின் முக்கிய பதவியை அலங்கரிக்கும் ஒருவர், தொழிலதிபருடன் ஒரு உல்லாசப் படகில் அதுவும் அழகிகளுடன் பொழுது போக்கியிருக்கிறார். சட்டத்தை மீறும் அல்லது சட்டத்தை அலட்சியம் செய்வதற்காக அவருக்கு வழங்கப்பட்ட இலஞ்சமே அது” என்று அலெக்ஸி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அடுத்து, நவல்னியின் உத்தியோகபூர்வ இணையதளமும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த காணொளி மற்றும் புகைப்படப் பதிவுகள் குறித்த சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்தே இந்த எச்சரிக்கை குறித்த வலைதளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.