இன்றைய திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் முதல் கல்லூரிக்கு செல்லும் இளம் பெண்கள் வரை பார்வைத்திறன் பாதிப்பால் கண்ணிற்கு கண்ணாடி அணிகிறார்கள். அதே போல் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அதிலும் குறிப்பாக கணினி முன்பாக மணிக்கணக்கில் கண்ணை இமைக்காமல் பணியாற்றுபவர்கள் தங்களின் கண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைக் கொள்வதேயில்லை.

தற்போது மருத்துவ துறையின் வளர்ச்சியால் கண்ணாடி அணிவதை தவிர்க்க பலரும் கண்ணிற்குள் பொருத்தப்படும் லென்ஸ் அதாவது கான்டாக்ட் லென்ஸ் அணியத் தொடங்கிவிட்டார்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், இதனை பராமரிப்பது கடினம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவர் பார்வை திறன் குறைபாட்டிற்காக கான்டாக்ட் லென்ஸ் அணியத் தொடங்கினால், அதனை பராமரிப்பது குறித்து முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனை அணிந்து கொண்டு குட்டித்தூக்கம் கூட போடக்கூடாது. இரவு உறங்குவதற்கு முன் இதனை பாதுகாப்பாக எடுத்து, அதற்காகவே இருக்கும் பிரத்யேகமான பெட்டியில் வைக்கவேண்டும். ஒவ்வொரு அதனை அணிந்து கொள்வதற்கு முன் இதற்காகவே தயாரித்து வழங்கப்பட்டிருக்கும் திரவத்தில் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே அணியவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் இந்த லென்ஸில் தேவையற்ற புரதச்சத்துகள் படிந்துவிடக்கூடும். இதன் காரணமாக கண்ணின் விழித்திரை பாதிக்கப்பட்டு, பார்வை திறன் குறைபாடு வருவதற்கும் வாய்ப்புண்டு. முடிந்தவரை இதனை அணிவதைத் தவிர்க்கலாம். இதனை அணிந்தால் தங்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்பவர்கள் மட்டுமே உரிய பாதுபாப்பு உணர்வுடன் இதனை அணிந்து கொள்ளவேண்டும். மற்றவர்கள் இதனை பொழுதுபோக்கிற்காக அணிவதை முற்றாக தவிர்க்கவேண்டும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.