காதலர் தினமான நேற்று பல்வேறு விலைமதிப்புள்ள பரிசுகள் காதலர்களுக்கிடையே பரிமாறப்பட்டிருக்கும். காதலர் தினத்தன்று காதலர்களை வாழ்த்தும் வகையில் சற்று வித்தியாசமாகச் சிந்தித்த ‘வேர்ஜின் அட்லான்டிக்’ என்ற விமான சேவை நிறுவனம், மேலதிகமாக 100 மைல்கள் பறந்திருக்கிறது, இதயத்தின் வடிவில்!

லண்டனின் கெட்விக் விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்பட்ட இந்த விமானம், ஐக்கிய இராச்சியத்தின் தென்மேற்குக் கடல் பகுதிக்கு மேலாக சுமார் இரண்டு மணிநேரம் பறந்து, தனது ‘இதய வடிவ’ பயணத்தை நிறைவுசெய்தது.

இந்த இதய வடிவப் பயணத்தின் தூரம் சுமார் நூறு மைல்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் பயணத்தை அவதானித்த வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம், குறித்த விமானம் பறந்த அமைப்பை ரேடார் கருவியின் உதவியுடன் படமாக்கி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளது.