ஹரியானாவில், உல்லாசப் பூங்காவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் கண் முன் மரணமானார்.

புனீத் கௌர் (28) என்ற அந்தப் பெண், தனது கணவர், மகன் மற்றும் உறவினர்கள் சகிதம் பிஞ்சோரில் உள்ள குறித்த பூங்காவுக்குச் சென்றிருந்தார்.

அங்கே, ‘கோ-கார்ட்’ எனப்படும் பந்தயக் காரைச் செலுத்த விரும்பிய அவர்கள், நான்கு கார்களை வாடகைக்கு எடுத்து செலுத்த ஆரம்பித்தனர்.

கார் இயங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில், தனது கணவருடன் அமர்ந்திருந்த கௌரின் தலைமுடி (கொண்டை) அவிழ்ந்து காருக்கு வெளியே பறக்க ஆரம்பித்தது. கணவருடன் வேகமாக காரில் செல்லும் உற்சாகத்தில் இருந்த கௌர் தலைமுடி அவிழ்ந்ததை கவனிக்கவில்லை.

இதனிடையே, நீளமான அவரது தலைமுடி காரின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததால், தலைமுடி ‘சரேல்’ என இழுபட்டது. அந்த வேகத்தில் கௌரின் தலையின் முடி தாங்கும் தோல் பகுதி முழுவதுமாகப் பிய்ந்து விழுந்தது.

திடீரென அலறிய மனைவியின் குரல் கேட்டு காரை நிறுத்திய கௌரின் கணவர், உடனடியாக கௌரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.

எனினும் சிகிச்சை பலனின்றி கௌர் உயிரிழந்தார்.

சம்பவம் பற்றி கௌரின் கணவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். எனினும் நடந்தது ஒரு விபத்தே என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.