டாக்காவில் இன்று நடைபெறவுள்ள பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இ-20 போட்டியில், இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலர் விளையாட மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன, பங்களாதேஷின் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குர் ரஹீம் மற்றும் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் ஆகியோர் காயம் காரணம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது.

தோற்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அசேல இன்று போட்டியில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக குசல் பெரேரா போட்டியை விட்டு விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் சேர்க்கப்பட்டிருந்தார்.

மேலும் அஞ்சலோ மெத்யூஸ் காயம் காரணமாக இன்றைய போட்டியைத் தவறவிடுவார் என்பதால், அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமல் இன்றைய போட்டிக்குத் தலைவராகப் பங்கேற்கவுள்ளார்.

இதுபோலவே, பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், மஹ்மதுல்லா அவ்வணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

அவ்வணியைப் பொறுத்தவரை இன்று மொத்தமாக ஐந்து புதுமுக வீரர்கள் களம் காணவிருக்கிறார்கள்.