ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெக்கோப் ஸுமா பதவி விலகினார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பேரில், அவரது கட்சியும் ஆளும் கட்சியுமான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அங்கத்தவர்கள் ஸுமாவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து நேற்று (14) தேசிய தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய ஸுமா, தனது பெயரால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்றும் தன்னால் தான் சார்ந்த கட்சி பிளவுபடுவதைத் தாம் விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களை முன்னிட்டு தாம் உடனடியாகப் பதவி விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஸுமாவை பதவி விலகுமாறு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிப்படையாகக் கேட்டிருந்தது. அத்துடன், அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

எழுபத்தைந்து வயதாகும் ஸுமா கடந்த எட்டு வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கிறார். அவரைப் பதவி நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் பலமுறை முயற்சித்தபோதும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர் ஸுமா என்பது குறிப்பிடத்தக்கது.