ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டன.  

ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேக்கர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம் டபிளியு.ஜே.கே. கீகனகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.