நீதிமன்ற வளாகத்தினுள் தனது பேத்தி மீது அவரது முன்னாள் கணவர் தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என, அமைச்சர் ஏ.எச்.எம்.ஃபௌஸி தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினர் மீது அவதூறைச் சுமத்துவதற்காகவே இவ்வாறான செய்திகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது பேத்தியை அவரது கணவர் கடந்த பத்தாம் திகதி நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு, பொலிஸ் உட்படப் பல முறைப்பாடுகளை அவர் சுமத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதை மறுத்திருக்கும் அமைச்சர் பௌஸி, அது குறித்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது பேத்தியின் திருமண வாழ்க்கைக்குள் வஸீர் அஹமட் என்ற திருமணமான நபர் ஒருவர் நுழைந்ததாகவும் அதனால் தனது பேத்தியின் மண வாழ்க்கை முறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அந்தரங்க வேலைகளைச் செய்துகொள்வதற்காக தனது பேத்தியை வஸீர் அஹமட் பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது பேத்தியின் மகளை வஸீர் அஹமதுவிடம் கையளிக்க நீதிமன்றில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து, தன் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் விதமாகவே இது போன்ற பொய்யான செய்திகளை அவர் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.