நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகியுள்ள 8,325 உறுப்பினர்களும் தத்தமது பதவிகளை எதிர்வரும் ஆறாம் திகதி (மார்ச் 6) பொறுப்பேற்கவுள்ளனர்.

இவர்களது பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான உத்தரவு நாளை அரச அச்சகக் கூட்டுத் தாபனத்திடம் கையளிக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இதேவேளை, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள் உட்பட அனைத்து அங்கத்தினர்களினது எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை ஒவ்வொரு கட்சியினதும் பொதுச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளன.

அவை கிடைக்கப்பெற்றதும் குறித்த பதவிகளுக்கான பெயர்களுடனான வர்த்தமானி பிரசுரத்துக்கான ஒழுங்குகளை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.