கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று சற்று முன்னர் திடீரென இடிந்து விழுந்ததில் மூவர் பலியாகினர்.

ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகப் பழைமையான இந்த நிறுவனத்தின் வளாகத்தினுள்ளே பல கட்டடத் தொகுதிகள் இயங்கி வருகின்றன. தயாரிப்பு, பொதிசெய் உட்படப் பல்வேறு பணிகள் இங்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று (14) பிற்பகல் சுமார் மூன்றரை மணியளவில் கட்டடங்களில் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்த பொலிஸ், மீட்பு, தீயணைப்பு மற்றும் அம்பியுலன்ஸ் வாகனங்களின் பரபரப்பான போக்குவரத்தால் கிராண்ட்பாஸ் மற்றும் ஆமர் வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, மீட்புப் பணியில் இராணுவத்தினரும் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.