பஞ்சாப்பில், விரிவுரையாளர் பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாணயத்தைச் சுண்டி முடிவெடுத்த அமைச்சர் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பஞ்சாப்பின் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சரண்ஜித் சிங் சன்னி. இவர், பஞ்சாப்பின் தொழில்நுட்பக் கல்வி அமைச்சருமாவார்.

பஞ்சாப்பின் சில அரச வெற்றிடங்களுக்கான பணி நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது. அதன்போது, ஒரே பதவிக்கு விண்ணப்பித்திருந்த இருவரில் யாரைத் தெரிவு செய்வது என்ற கேள்வி எழுந்தது.

கல்வித் தகுதி உள்ளவரை நியமிக்கலாம் என அமைச்சரின் அதிகாரி ஒருவர் கூற, “நாணயத்தைச் சுண்டித் தீர்மானித்தால் என்ன?” என்று கேட்ட அமைச்சர், தன் கையாலேயே நாணயத்தைச் சுழற்றி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகவே, ஆளும் காங்கிரஸ் கட்சி உட்படப் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனினும் ‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியையே நாணயச் சுழற்சி மூலம்தான் ஆரம்பிக்கிறார்கள்’ என்று தத்துவம் (!) கூறுகிறார் அமைச்சர்!