"உள்ளூராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளனர்" என முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற  ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும்,

"இந்த வெற்றியை தமக்கு ஈட்டி தந்த மக்களுக்கு நாம் நன்றிகளை தெரிவிக்கின்றோம். கடந்த மூன்று வருடங்களில் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் ஆட்சியை அமைப்பதற்கு எம்மிடம் பெரும்பான்மை இல்லாத போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

நாங்கள் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டோம். தற்போது நாங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்துள்ளோம். அதனால் நாங்கள் இணைவதில் ஆச்சரியம் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமாகத ஒன்று. அதனால் இ.தொ.காவை இணைத்துக்கொண்டோம்.

எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எங்களுக்கென்று தனிப்பட்ட இலக்கு ஒன்று இருக்கின்றது. அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.

அதேபோல மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலிலும் கூட்டு எதரணி வெற்றிப்பெறும்.

எனினும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தற்போதைக்கு என்னால் எதுவும் உறுதிப்பட கூற முடியாது" என்றார்.