(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்களுக்கான சம்பள உயர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவும் இல்லை. எனவே தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

வாழ்வதற்கு வழியில்லாது மலசலகூட வசதியும் இல்லாது தோட்டத் தொழிலாளர்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர். இதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பள சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி அங்கிகரிக்கப்படுவதற்காக தொழிலாளர் அமைச்சு முன்வைத்த பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழில் இல்லாமல், வாழ்வதற்கு வழியில்லாமல் பெரும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். ஜனவசம உட்பட பல கம்பனிகள் தொழிலாளர்களுக்கு சம்பளம் நேரத்திற்கு வழங்குவதில்லை. 

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி செலுத்தப்படுவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபா 620 தான் வழங்கப்படுகிறது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்கின்றது.

இந்தச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு எவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழிலாளருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்பள உயர்வை வழங்குவோம் என தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதிமொழிகளை வழங்கி பாராளுமன்றம் வந்தவர்கள் இன்று உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு அம் மக்களை ஏமாற்றி கஷ்டத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.

2500 சம்பள உயர்வும் இல்லை. வீடும் இல்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் லயன் காம்பராக்களிலேயே வாழ்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாதீர்கள் அவர்களுக்கு வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். தொழிலாளர்களுக்கு இன்று மலசல கூட வசதியும் இல்லாமலேயே வாழ்கின்றனர். எனவே மலையக மக்களின் பிரச்சினைகளை வடபகுதி அரசியல்வாதிகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலையகத்தை சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில்  வாழ்கின்றனர்.

அத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மரண சகாய நிதியாக ரூபா 100 குறைத்துக் கொள்ளப்படுகின்றது. ஆனால் தொழிலாளி இறக்கும் போது மரண நிதியுதவி வழங்குவதில்லை. சவப்பெட்டி கொள்வனவு செய்யவும் உதவி வழங்கப்படுவதில்லை.

தொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகு தான். மரண உதவிஇ நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. தெரிவித்தார்.