நூறாவது போட்டியில் நூறு ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ஆரம்ப வீரர் ஷிகர் தவான் பெற்றார்.

இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ரபாடாவுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் என்ன ராசிப் பொருத்தமே தெரியவில்லை, இந்த முறையும் ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தினார்.

இந்தச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக ஆறு முறை ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோலியும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

75 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.

எனினும் தனது நூறாவது போட்டியில் விளையாடும் ஷிகர் தவான், சிறப்பாக ஆடி 100 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம், நூறாவது போட்டியொன்றில் நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்தார். இது அவரது பதின்மூன்றாவது ஒருநாள் சதமாகும்.

109 ஓட்டங்களுடன் ஷிகர் தவான் ஆட்டமிழக்க, அணியின் ஓட்ட வேகம் குறைய ஆரம்பித்துள்ளது.

தற்போது 42 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 240 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

டோனி 18 ஓட்டங்களுடனும் ஷ்ரியாஸ் ஐயர் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.