நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி ரோஜா நிறத்திலான சீருடையை அணிந்து விளையாடவிருக்கிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே கருத்தை மையமாகக் கொண்டு இதே நிறச் சீருடையுடன் தென்னாபிரிக்கா ஐந்து முறை விளையாடியுள்ளது. அந்த ஐந்து ஆட்டங்களிலும் தென்னாபிரிக்கா பெருவெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக 2013 டிசம்பரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், ரோஜா நிறச் சீருடையில் விளையாடிய தென்னாபிரிக்க அணி, 141 ஓட்டங்களால் இந்தியாவை வெற்றிகொண்டிருந்தது.

அதுபோலவே, ஏபி டி வில்லியர்ஸ் இந்த ரோஜா நிறச் சீருடையை அணிந்து விளையாடிய ஒரு சந்தர்ப்பத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து 44 பந்துகளில் 149 ஓட்டங்களை விளாசித் தள்ளியிருந்தார்.

2013இல் இந்தியாவுக்கெதிரான போட்டியிலும் அவர் 47 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

காயம் காரணமாக ஒதுங்கியிருந்த ஏபி டி வில்லியர்ஸ், நடைபெறவுள்ள நான்காவது போட்டியில் ரோஜா நிறச் சீருடையில் களமிறங்கவுள்ளதால், பலத்த எதிர்பார்ப்பு தென்னாபிரிக்க ரசிகர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

இப்போட்டியைக் கண்டுகளிக்க மைதானத்துக்கு வரும் இரசிகர்களும் ரோஜா நிற ஆடையை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.