அமெரிக்க காங்கிரசில் செலவின மசோதா குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு உள்ளாகியுள்ளது

அமெரிக்காவில் அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறாததால் கடந்த மாதம் 19ஆம் திகதி அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வந்தன. எல்லை பாதுகாப்பு மற்றும் மெக்சிகோ சுவருக்கு நிதி, சிறுவயதில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து அதிபரின் கொள்கையில் முரன்பாடு கொண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் மசோதா நிறைவேறுவதற்கு தடையாக நின்றனர்.

செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) அரசியல் நாடகம் நடத்துவதாக குடியரசு கட்சி குற்றம் சாட்டியது. இதனையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மசோதா நிறைவேற ஜனநாயக கட்சி உறுதியளித்தது. அதனை அடுத்து கதவடைப்பு முடிவுக்கு வந்தது. 

செலவின மசோதாவை நிறைவேற்ற பிப்ரவரி 8ஆம் திகதி வரை கால அவகாசம் இருந்த நிலையில், செனட் சபையில் நள்ளிரவு வரை இது தொடர்பான விவாதம் நடந்தது.

9 மணி நேர விவாதத்திற்கு பின்னர் குடியரசு கட்சி உறுப்பினர் ராண்ட் பால் ஆதரவாக வாக்களித்தார். 

இதற்கிடையே மசோதா நிறைவேறுவது நள்ளிரவை தாண்டியதால் மீண்டும் அதிகாரப்பூர்வமாக கதவடைப்பு  செய்யப்பட்டது. செனட் சபையில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட மசோதா, பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் நிறைவேற்றிய பின்னர் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட பின்னர் கதவடைப்பு முடிவுக்கு வரும்.

ஆனால் பிரதிநிதிகள் சபையில் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் இருந்தால் கதவடைப்பு இன்னும் சில நாட்களுக்கு தொடரலாம் என கூறப்படுகிறது.

இன்று அரசு அலுவலகங்கள் இயங்குமா? அடைக்கப்படுமா? என ஊழியர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர்.