ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதற்கு ஆண்டாள் சன்னதிக்கு முன் வந்து மன்னிப்பு கேட்க கோரி சிறிவில்லிப்புத்தூர் ஜீயர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக ஹெச் ராஜா வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சிறிவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கெமரா பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்திருக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி எழுந்திருக்கவில்லை. இதை பெரிதுபடுத்தாதவர்கள் விஜயேந்திரர் விவகாரத்தை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்கு ஆதாரமாக மேற்கோள் எதுவும் இல்லை. அவர் பொய்யான, சந்தேகமான விதைகளை தூவுகிறார். கட்டுரைகளின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவது வைரமுத்துவின் வாடிக்கை. இதற்காக ஜீயர் தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை. அவர் அதனை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ’ என்றார்.