குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று  ஆரம்பமாகி எதிர் வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளைப் போல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இந்த போட்டியில் அரங்கேறும்.

அந்த வகையில் 23 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர் வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் ஐஸ் ஹொக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உட்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது.

இக் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்  இந்தியா, அமெரிக்கா, ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நிவ்ஸ்லாந்து, நெதர்லாந்து உட்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீர , வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தென்கொரியாவில் நடைபெறும் இப் போட்டியில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது.

தொடக்க விழாவில் இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும். அத்துடன் ஐஸ் ஹொக்கி பெண்கள் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களம் இறங்குகிறார்கள்.

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும். 1988 ஆம் ஆண்டில் தென்கொரியா தலைநகர் சியோலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று இருந்தது.

போட்டியை நடத்தும் தென்கொரியா அணியில் 122 வீர, வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்கா, வடகொரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.