கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் தற்காலிகப் பிணையில் (பரோல்) விடுவிக்கப்பட்டுள்ளார்.

மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயசீலன். இவர் இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜெயசீலனின் மகன் நோய் தாக்கி மரணமானார். இதையடுத்து, மகனின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள ஜெயசீலனுக்கு அனுமதி கோரி, ஊர்க்காவற்றுறை நீதிமன்றில் இந்தியத் தூதரக அதிகாரிகள் இன்று மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுவதாகத் தெரிவித்த நீதவான், ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக தற்காலிகப் பிணையில் ஜெயசீலன் அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் ஜெயசீலனை மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.