லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டு பணிநீக்க உத்தரவை இரத்து செய்த நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே பிரியங்க பெர்னாண்டோவுக்கு  எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லையென இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க   தெரிவித்துள்ளார்.

இதேவைளை, சம்பவம் குறித்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும்  அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை எனவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை, சிங்கம் கொன்றொழித்து விட்டதாக, அவரது இராணுவ சீருடையில் உள்ள சிங்க இலச்சினையை சைகை மூலம் காண்பித்துள்ளமையே ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.