ஊழல் நிறைந்த இடத்திலிருந்து நாட்டினை மாற்ற முடியாததாலேயே புதிய அணியில் இணைந்தேன். புதிய அணியும் ஊழல் நிறைந்த அணியாகவுள்ளது. இந்த நிலையில் புதிய பயணமே தேவைப்படுகின்றது. ஊழல்வாதிகளுடன் இனியொருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என்று  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்களின் ஆணைக்கு அமைய சகல குற்றவாளிகளையும் தண்டிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (7) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தூய்மையான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள, தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் இணைந்துள்ளோம். இந்த நாட்டினை அபிவிருத்தி அடையச்செய்ய, ஒன்றிணைக்க, நாட்டையும் நகரையும் கிராமங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் தேர்தலாக மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நாம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெருந்திரளான தமிழ் மக்கள் என்னை ஆதரித்தனர். கிழக்கில் முஸ்லிம் மக்களின் ஆதரவும் அவ்வாறே இருந்தது. அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை கூட்டங்களிலும் மக்கள் நிறைந்து இருந்தனர். ஆகவே ஒரு நாடாக, ஒரு குடையின் கீழ் மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். ஒன்றாக நாட்டினை கட்டியெழுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

ஊழல் மோசடிகள் எந்தப் பக்கம் இருந்தாலும் யாராக இருந்தாலும் கட்சி, நட்பு, உறவு என்று எதையும் பார்க்காது குற்றவாளிகளுக்கு உயரிய தண்டனையினை வழங்குவேன். யாரையும் பழிவாங்க நான் நினைக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை. அதேபோல, தவறு செய்யும் யாரையும் நான் பாதுகாக்கவோ, காப்பாற்றவோ தயாராக இல்லை. மக்கள் என்னை நம்புகின்றனர். மக்களின் நம்பிக்கையினை நான் பொய்யாக்க மாட்டேன்.

எமது மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. அதற்காக சகல  நாடுகளுடனும் நட்புறவை பேணி அவர்களுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பேன்.

இந்த நாட்டினை ஜனநாயக ரீதியில், மனித உரிமைகளை பாதுகாத்து மக்கள் நலன் கருதிய நாடாக நான் மாற்றியமைப்பேன். அதற்காக இந்தத் தேர்தலில்  நாம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று நாட்டில் தூய்மையான பயணத்தை மேற்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.