(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கான பிரச்சார காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்த நிலையில்  வாக்களிப்பு தினம் வரையிலான அடுத்த 48 மணி நேரம் தொடர்பில் கடுமையாக சட்டத்தை அமுல் செய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இந்த 48 மணி நேரத்தில் எந்த வகையிலும் எவ்வித பிரச்சாரங்களையும் முன்னெடுக்க முடியாது என்பதால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில்  பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது,

'இன்று நள்ளிரவுடன் அனைத்து விதமான பிரச்சாரங்களும் தடைச் செய்யப்படுகின்றன. வீடு வீடாக சென்று வாக்குக் கேட்பதும்  இன்று இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன. எனவே அதன் பின்னர் உள்ள 48 மணி நேர மெளன காலத்தில் எவரேனும் பிரச்சாரங்கள் செய்வார்களாயின் அவர்களுக்கு எதிராக் கடும் நடவடிக்கை எடுக்கபப்டும்.

 அத்துடன் இக்காலப்பகுதியில் அபேட்சகரின் வீட்டிலோ காரியாலயத்திலோ கூட, கட்டவுட்களை காட்சிப்படுத்த முடியாது. அது தொடர்பிலும் அவதானம் செலுத்தபப்டும். 

 இதனிடையே வேட்பு மனுத் தாக்கல்  செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 568 முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

 அதில் 141 முறைப்பாடுகள் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலானது என கூறிய பொலிஸ் தலைமையகம்  568 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை தொடரும் நிலையில் 24 அபேட்சகர்கள் உள்ளிட்ட 135 பேரை கைது செய்துள்ளதாக சுட்டிக்காட்டியது.

 இதனைவிட பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின் போது தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 177 சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானோரில் 36 அபேட்சகர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.