( எம்.எப்.எம்.பஸீர்)

 எதிர்வரும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில்  நடை பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை அமைதியான முறையில் நடாத்தி முடிக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், முப்படையினரை உள்ளடக்கியதாக இந்த பரந்த பாதுகாப்பு கட்டமைப்புடன் கூடிய நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில்  4178 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65758 பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்களைக் கொண்ட படையணி கடமையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் இன்று அந்தந்த பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளுக்கு சென்று கடமைகளைப் பொறுப்பேற்று 9 ஆம் திகதி முதல் தேர்தல் கடமைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடுவர் என்றும்   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 இவர்களில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை வீரர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் கலகமடக்கும் பிரிவின் வீரர்கள் 1106 பேரும் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள் 1320 பேரும் உள்ளடங்குவதாகவும் இவற்றுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாபபு திணைக்களத்தின் 5953 பேர் கொண்ட படையணியினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும்  பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, இந்த விஷேட பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாக அடையாளம் காணப்பட்ட 155 இடங்களில் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் 855  முப்படை வீரர்கள், பாதுகாப்புப் படையணிகளின் கட்டளைத் தலைமையகத்தின் வழி நடத்தலில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இதனைவிட அவசர நிலைமையொன்றினை எதிர்கொள்ளும் விதமாக  மேலும் 6000 முப்படை வீரர்களைக் கொண்ட பாதுகாப்பு படையணி நாடளாவிய ரீதியில் பல இடங்களை மையப்படுத்தி நிலைகொள்ள  செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  மேலும் கூறினார்.  

இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை அழைக்கும் உரிமை, அவ்வந்த மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் உதவியுடன் பிராந்தியங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, தேர்தல்கள் விடயங்களை கையாளும் பொலிஸ் தேர்தல் செயலகத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் அசோக தர்மசேனவுடன் இணைந்து நடாத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டார்.

இதன்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி 13420 வாக்களிப்பு நிலையங்களை மையப்படுத்தி  ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரு பொலிஸார் வீதம் பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு ஒரு சார்ஜன், கான்ஸ்டபிள் வீதம் 26840 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலைய பாதுகாப்புக்காக ஆயுதங்கள் சகிதம் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைவிட வாக்களிப்பு, வாக்கெண்ணும் நிலையங்களை மையப்படுத்தி விஷேட நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கை கட்டமைப்புக்கள் அமைக்கப்படும். 3225 நடமாடும் குழுக்கள் இவ்வாறு அமைக்கப்படவுள்ளன.  பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், கான்ஸ்டபிள் ஒருவர், சிவில் பாதுகாப்பு படையணியின் இருவர், பொலிஸ் சாரதி ஒருவர்  நடமாடும் ஒரு குழுவில் உள்ளடங்குவர். இதற்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் இவர்களுடன் இரு பொலிஸ் விஷேட அதிரடிப்படை வீரர்களும் இருப்பர். அதன்படி நடமாடும் பாதுகபபு குழுக்களுக்காக மட்டும் 13552 பொலிஸ்  உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்கு மேலதிகமாக பல இடங்களில் பொலிஸ் விஷேட அதிரடிப்படைப் வீரர்களை மட்டும் உள்ளடக்கிய நடமாடும் பாதுகாப்பு குழுக்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. அவ்வாறான ரோந்து குழுக்கள் 99 பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஊடாக அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த 99 குழுக்கள் தொடர்பில் 1174 பொலிஸ் விஷேட அதிரடிப்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஸ்தாபிக்கப்பட்டுள்ள 25 நிலையங்கள் தொடர்பில் 1275 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் கலகமடக்கும் பொலிஸார் நிலைகொள்ள  செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அத்தியட்சர்,  உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளை மையப்படுத்தி 140 கலகமடக்கும் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  1106  கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வீதி சோதனை சாவடிகளும் பாதுகப்பு கருதி அமைக்கப்படவுள்ள நிலையில் அவ்வாறான 464 சோதனை சாவடிகள் நாடளாவிஒய ரீதியில் அமைக்கப்படுவதுடன்  3248 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவை அனைத்தையும் விட அனைத்து பொலிஸ் நிலையங்களும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மேலதிகமாக, அவர்களால் முன்னெடுக்கப்படும் தேர்தல் கடமைகள் தொடர்பில் மேற்பார்வை செய்ய பொலிஸ்  அத்தியட்சர் ஒருவர் அல்லது  உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் அல்லது  பிரதான பொலிஸ்  பரிசோதகர் ஒருவர் நியமிக்கப்பட்வுள்ளார்.  அத்துடன் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு, ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஒரு தொகை பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதன்படி தேர்தல்கள் விடயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக  அந்தந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின்  நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் அத்தியட்சர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் தர அதிகாரிகள் 225 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனைவிட பிரதான பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரிகள் 510 பேரும் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரிகள் 5219 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அத்துடன் இந் நடவடிக்கைகளில் பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் 412 பேரும் க்லடமைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன் பெண் பொலிஸ் காண்ஸ்டபிள், சார்ஜன் தர உத்தியோகத்தர்கள் 4381 பேர் தேர்தல்கள் கடமைகளுக்கு என வேறுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சார்ஜன், காண்ஸ்டபிள் தர உத்தியோகத்தர்கள் முறையே 14079 மற்றும்  33385 பேர்  தேர்தல்கள் கடமைகளுக்கு என நிலைகொள்ளச் செய்யப்ப்ட்டுள்ள நிலையில்  பொலிஸ் சாரதிகள் 2019 பேரும் அக்கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள் 1320 பேரும்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 4178 பேரும் சிவில் பாதுகாபபு படையணியின் 5953 பேரும் கடமைகளில் ஈடுய்படுத்தப்படவுள்ளனர். என்றார்.

இதனிடையே இம்முறை தேர்தல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் உதவி பெறப்படும் நிலையில், வாக்களிப்பு, வாக்கெண்ணும் நிலையங்கள் தவிர்ந்து ஏனைய பகுதிகளில் பாதுகாப்புக்கு அவர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

 அதன்படி அடையாளம் காணப்பட்டுள்ள 155 இடங்கள் தொடர்பில் தமது 33 அதிகாரிகளும் 822 சிப்பாய்களையும் உள்ளடக்கிய 855 பேர் கொண்ட படையணி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

இதில்; இராணுவத்தின் 26 அதிகாரிகளும் 704 சிப்பாய்களும் உள்ளடங்குவதுடன் கடற்படையின் 4 அதிகாரிகளும் 70  சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர். விமானப்படையின் 3 அதிகாரிகளும் 48 சிப்பாய்களும் குரித்த பாதுகபபு நடவடிக்கைகளில் ஈடுபfடுவர் என சுட்டிக்காட்டிய பிரிகேடியர் சுமித் அத்தபத்து,  இவற்றை   விட அவசர நிலைமையை சமாளிக்கும் முகமாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆலோசனைக்கு அமைவாக 6000 பேர் கொன்ட இராணுவ படையணி தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.