இலங்கையில் முதன் முறையாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை எனக்கு மிக்க மகிழ்ச்சியையளித்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதுவர் ஆஷ்லி ஜூட் தெரிவித்தார்.

இதேவேளை, அதிகளவில் பெண்கள் பல பிரச்சினைகளுக்க முகங்கொடுத்துள்ள பகுதியாக இலங்கையின் வடபகுதி காணப்படுவதாகவும் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்த ஆஷ்லி, தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆஷ்லி ஜூட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹொலிவூட் விருது பெற்ற சிறந்த நடிகையும் எழுத்தாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்கத் தூதுவர் ஆஷ்லி ஜூட் கடந்த  3 ஆம் திகதி இலங்கை வந்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுவந்துள்ள ஆஷ்லி, நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பெண்களின் நிலை தொடர்பாக ஆராய்ந்து கருத்துக்களை பெற்றுக் கொண்டதோடு விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் பேராதெனிய பல்கழைக்கழகத்திற்கு சென்று இளம் மாணவிகள் எதிர்நோக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக கேட்டறிந்ததோடு எதிர்காலத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களையும் வகுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள பெண்கள், மகளிர் வைத்தியசாலைக்கு சென்று கர்ப்பிணித்தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.

பிரபல பெண்கள் தொழிற்சாலையொன்றிக்கு சென்றும் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் நிலை, வாழ்வாதாரம், பாலியல் தொல்லைகள் மற்றும் தற்காப்பு செயற்பபாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து இலங்கை பெண்களுக்கு பல வழிகளிலும் ஆதரவாக இருக்க போவதாகவும் அவர்களுக்கு விழப்புணர்வு கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

பாலியல் சமத்துவம், இனம், மதம், மொழி வேறுப்பாட்டைக் கடந்து ஒவ்வொருவரது உள்ளத்திலும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தோன்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 ஊடகவியலாளர் ஒருவரினது கேள்விக்குப் பதிலளித்த ஆஷ்லி, தனது இந்த விஜயத்தின் போது யுத்தகளமாக இருந்த வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாததையிட்டு தான் மிக வருத்தமடைவதாகவும் எதிர்கால இலங்கை விஜயத்தின் போது வடபகுதிக்கு சென்ற அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேச முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்தார்.