ஊழலுக்கெதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் மீது அதிக பட்ச நம்பிக்கையை வைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் அலவ்வை மற்றும் கல்கமுவ பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவைப்படுவது தெளிவான அரசியல் கொள்கையே அல்லாமல் தனிநபர் செல்வாக்கல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் கொள்கையோ தொலைநோக்கோ இன்றி திருடர்களின் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கட்டியெழுப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சிக்கு இருப்பு கிடையாது என்றும் தெரிவித்தார்.

அன்றும் தனிப்பட்ட அரசியல் நிரலில் பிழைவிட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக அதிகாரத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் தலைவர், மீண்டும் தனிநபர் செல்வாக்கை கட்டியெழுப்பும் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் மக்கள் முன் வந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நிகழ்ச்சி நிரலை தோல்வியடையச் செய்வதற்கு நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

குருணாகலை மாவட்ட அபிவிருத்தியில் பாதிப்பு செலுத்தும் பல்வேறு காரணிகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் அந்தப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட காரணத்தினால் காணிகளை இழந்த பிரதேச மக்களுக்கு உரிய நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு தேவையான நிகழ்ச்சித் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தம்பதெனிய தொகுதி அமைப்பாளர் ஷாந்த பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலவ்வை பிரதேச மக்கள் பிரதிநிதிகளான அநுர பிரியதர்சன யாப்பா, தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரோஹன பஸ்நாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகலை மாவட்ட அமைப்பாளர் சனத் பத்மசிறி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து குருணாகலை கல்கமுவ பிரதேச்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். 

இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடியற்ற ஆட்சிக்கு மக்களுக்கு உறுதிமொழியை வழங்கக்கூடிய ஒரே ஒரு தூய அரசியல் இயக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமேயாகும் எனக் குறிப்பிட்டார்.

ஊழல், மோசடிக்காரர்களையும் திருடர்களையும் பலப்படுத்துவதற்கு தேர்தலில் மக்கள் உதவக்கூடாது என்றும், இம்முறை தேர்தலை ஊழலுக்கெதிராக குரலெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ளுமாறும் ஜனாதிபதி, அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கல்கமுவ தொகுதி அமைப்பாளர் தாரானாத் பஸ்நாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, டி.பி.ஏகநாயக்க, பந்துல பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.