பிரித்தானியாவின் முதல் குடிமகன் எப்படி இருந்திருப்பார் என்ற கற்பனைக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்துள்ளனர். இவர், இப்படித்தான் இருந்திருப்பார் என்கிறது நவீன ஆய்வு முடிவுகள்!

பிரித்தானியாவின் ஆதிக் குடியின் முன்னூறாவது தலைமுறையே இன்றைய பிரித்தானியர்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதன்படி, முன்னூறு தலைமுறைக்கு முந்தியவர் எப்படி இருந்திருப்பார் என்பதை அறிய, புதிய தலைமுறையின் மரபணுவில் இருந்து பின்னோக்கி ஆராயத் தொடங்கினர் விஞ்ஞானிகள்.

பிரித்தானியாவில், 1903ஆம் ஆண்டு அந்நாட்டின் பழைமையான எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து, பிரித்தானியாவில் மனிதர்களின் வாழ்க்கை தொடங்கப்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள்.

அவர்களது முடிவின்படி, வெள்ளையர்கள் தேசமாகக் கருதப்படும் பிரித்தானியாவின் ஆதிக்குடி ஒரு கறுப்பராக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கப் பெற்றுள்ள எலும்புக்கூட்டுடன் இந்த உருவம் மிகச் சரியாக ஒத்துப் போவதாக வியக்கின்றனர் விஞ்ஞானிகள்!

கருமையான சுருள் முடி மற்றும் நீல நிறக் கண்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலையை ஒத்ததாகவே பிரித்தானிய ஆதி மனிதன் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தற்போதைய தலைமுறைகளின் நிறமாற்றம் அண்மையிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆதி மனிதன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அவனது 20 வயதுகளிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியமாக, இந்த ஆதி மனிதனின் மரபணுவின் சில அம்சங்கள், இன்றைய பிரித்தானியர்களில் பத்தில் ஒருவரது உடலில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.