மத்திய வங்கியின் பிணைமுறி வினியோக மோசடியில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன ஆகியோர் வெலிக்கடை, மெகஸீன் சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கு அமைய நேற்று முன்தினம் சிறைவைக்கப்பட்ட இவர்கள், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பர்.

ஈ பிரிவில் பிரமுகர்கள் சிலர் தங்க வைக்கப்படுவதால், அங்கே விசேட வசதிகள் இருக்கும் எனத் தகவல்கள் கிளம்பியுள்ளன.

ஆனால், இது உண்மைக்கு மாறான தகவல் என சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் அலோஷியஸ், பலிசேனவும் இருவரும் வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அத்துடன், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய அவ்விருவரையும் அவர்களது குடும்பத்தார் பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிய முடிகின்றது.