குளிர்கால ஒலிம்பிக் போட்டியையிட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 1200 பாதுகாப்புப் படை வீரர்கள் ஒருவகையான  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து  அப்படை வீரர்கள் கடமையிலிருந்து மீளப் பெறப்பட்டுள்ளதாக தென்கொரிய ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக 900 இராணுவ வீரர்களை நேற்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஒலிம்பிக் குழுவினர் கூறியுள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த  1200 பாதுகாப்புப் படை வீரர்கள் ஒருவகையான  வைரஸ் தொற்றினால் திடீரென்று வாந்தி மற்றும் வயிற்றோட்டத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில்  41 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட படை வீரர்கள் உட்பட ஏனைய படை வீரர்களும் கடமையிலிருந்து மீளப் பெறப்பட்டுள்ளனர்.

மேற்படி படை வீரர்கள் எவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்கள் என்பது தொடர்பாகத் தெரியவில்லை. மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் குடிநீர், உணவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்ட பின்னரே படை வீரர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் குழுவினர் கூறியுள்ளனர்.