ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் பிரகாரம் அடிப்படை சுயநிர்ணய உரிமை நீதி மற்றும் நியாயமான தீர்வின் ஊடாகவே பிராந்தியத்தில் நீடித்த சமாதானம் நிலவும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஸ்மீர் ஒருமைப்பாட்டு தின கருத்தரங்கில் உரையாற்றும் போதே இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

காஷ்மீர் ஆய்வு மன்றத்தின் தலைவர் ஜமாலுதின், பாகிஸ்தானின் ஆய்வாளர் மற்றும் சமூகசேவகர், முன்னாள் விமானப்படை தளபதி.ஷபீர் அஹ்மத், இலங்கையின் பிரசித்திபெற்ற பதிப்பாசிரியர் அமீன் இஸ்ஸதீன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“காஷ்மீர் பிரச்சினை 70 ஆண்டு காலமாக நிலவிவருகின்றது. சர்வதேச சமூகத்தினால் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உறுதி வழங்கப்பட்டது இருப்பினும் அதற்கான தீர்வு இன்றுவரை  பெற்றுத்தரப்படவில்லை. 

காஷ்மீர் மக்கள் இன்றும் கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். காஸ்மீர் பிரச்சினையின் காரணமாக சார்க் அமைப்பில் மிக முக்கிய இருநாடுகளாக காணப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அரசியல் ஸ்த்திரத்தன்மை நிலவினால் மாத்திரமே சார்க் குறிப்பாக தெற்காசிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கலாம்.

மேலும் காஸ்மீர் மக்களின் விருப்பத்திற்குகேற்ப இப்பிரச்சினை தீர்வுகாணப்படாவிட்டால் இப்பிராந்தியத்தில் சமாதானத்தினை அனுபவிக்கவியலாது. மேலும் பாகிஸ்தான் அனைத்துவிதமான தீவிரவாதத்திற்கும் முற்றிலும் எதிராக செயற்பட்டுவருகின்றதுடன், தீவிரவாதத்தினை இல்லாதொழிப்பதற்கு தனது மண்ணிலே அளப்பரிய தியாகங்களை மேற்கொண்டுள்ளது. 

காஸ்மீரிகளின் நீதியானதும், சட்டரீதியானதுமான போரட்டத்தினை தீவிரவாதத்துடன் பிணைப்பதற்கான முயற்சிகள் முறையற்றது. காஸ்மீரிகளின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மற்றும்  சுதந்திரம் கிடைக்கும்வரை பாகிஸ்தான் காஸ்மீரிகளுக்கு உறுதியான ஆதரவினை வழங்கும்.”

காஸ்மீர் ஆய்வு மன்றத்தின் தலைவர் ஜமாலுதின் உரையாற்றுகையில்,

காஸ்மீர் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீரமானங்கள் மற்றும் காஸ்மீர் மக்களின் விருப்பத்திகேற்ப முடிவுறுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் ஆய்வாளர் மற்றும் சமூகசேவகர் மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி .ஷபீர் அஹ்மத  கருத்து தெரிவிக்கையில், 

“ஜம்மு மற்றும் காஸ்மீர் இருநாடுகளுக்குமிடையில் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு காஸ்மீர் பிரச்சினை தீர்க்கப்படுதல் அவசியம். மேலும் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா ஜம்மு மற்றும் காஸ்மீர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் பிரகாரம் நிறேவேற்ற வேண்டும்”.

இக்கருத்தரங்கில் உரையாற்றுகையில் இலங்கையின் பிரசித்திபெற்ற பதிப்பாசிரியர் அமீன் இஸ்ஸதீன் கருத்து தெரிவிக்கையில்,

 காஸ்மீர் பிரச்சினைக்கான தீர்வின் கொள்கைகள்  காஸ்மீரின் இரு எல்லைப்பகுதியிலும் வாழ்கின்ற   மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைய வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக பாராட்டப்பட வேண்டுமாயின் அது மனிதாபிமானமாக இருக்க வேண்டும். அத்துடன் இந்திய தலைவர்கள் காஸ்மீர் மக்களின் விருப்பங்கள் மற்றும் சுதந்திரத்திற்கான அவர்களின் கண்ணீரினை புரிந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கின் போது மேஜர் ஜெனரல் உதய பெரேரா நடுநிலை வகித்து கருத்து தெரிவிக்கையில்,

 “காஸ்மீர் பிரச்சினை 70 ஆண்டுகலாக நீடித்துவருகின்றதுடன், காஸ்மீர் மக்கள் இன்றுவரை துன்பப்பட்டுவருகின்றனர்.

 ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மற்றும் இந்தியா காஸ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இப்பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும்”.

இக்கருத்தரங்கிற்கு பெருமளவானோர் கலந்துக்கொண்டதுடன், இங்கு வினவப்பட்ட வினாக்களின் பின்னர் கலந்துரையாடலும் இடம்பெற்றது.