"போதைபொருள் வாங்குபவர்களுக்கு தான் தெரியும் விற்கப்படும் இடம். வெறுமனே பிரச்சாரம் செய்பவர்களுக்கு தெரியாது. எனவே போதைபொருள் பாவிப்பவர்களிடம் தெரிந்துக்கொள்ளலாம் போதைபொருள் எங்கு உள்ளது என்று" என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கு ஐ.தே.க. யின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து டிக்கோயா நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஹட்டனை போதைபொருள் இல்லாத நகரமாக்குவோம் என பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றது. ஹட்டன் நகரில் இவ்வளவு காலமாக போதைபொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் வாங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும். யாரோ ஒருவன் போதைபொருள் விற்பனையில் ஈடுப்படுவதற்காக முழு நகரத்தையும் குற்றம் சுமத்த முடியாது.

ஹட்டன் நகரம் இன்று பல மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் போற்றுகின்ற நகரமாகும். இன்று இந்த நகரத்தை கேவலப்படுத்துகின்றார்கள்.

ஹட்டன் நகரத்தில் போதை பொருள் உள்ளது! போதை பொருள் உள்ளது! என்று பிரச்சாரம் செய்து நகரத்தை கேவலப்படுத்துகின்றார்கள். ஹட்டன் நகரத்தில் படித்த சமூகம் உள்ளது. சிறந்த பாடசாலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான மத்தியில் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதனால் எதையும் சாதிக்க முடியாது.

மேலும் நுவரெலியாவில் மதுபான பாவனை அதிகமாக காணப்படுகின்றது என்கிறார்கள். இதற்கு காரணம் ஒன்று உள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மதுபான பாவனை அதிகம் என்று நான் கூற மாட்டேன். நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா பிரதேசமாகும். நுவரெலியாவிற்கு தான் இலட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

வெளிநாட்டவர்களும் அதிகமாக மதுபானம் பாவிப்பதன் காரணமாக எமது தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் அதிகமாக மதுபானம் பாவிக்கின்றார்கள் என்று விளக்கம் செய்ய முடியாது.

தற்பொழுது சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக செல்பவர்களும் போதைபொருள் பாவனையில் ஈடுப்படுகின்றனர். இதற்காக மலையகத்தில் போதைபொருள் அதிகம் என்றும் கூற முடியாது.

வெளிநாட்டவர்கள் அதிகமாக மதுபானம் பாவிப்பதனால் நுவரெலியா மாவட்டத்தில் அதிகமாக மதுபான விற்பனை செய்யப்படுகின்றதே தவிர எமது தோட்ட தொழிலாளர்களினால் தான் அதிகமாக மதுபான விற்பனை இடம்பெறுகின்றது என்று கூறினால் எவ்வாறு நம்ப முடியும்?

எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக பல அபிவிருத்திகளை செய்து வருகின்றது.

ஆகவே இந்த அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் நகர சபையை நாம் கைப்பற்ற வேண்டும். நகர சபையை நாம் கைப்பற்றினால் தான் எமது நகரத்திற்கு இன்னும் பல நவீன முறையிலான புதிய திட்டங்களை நாம் முன்னெடுக்க முடியும்.

நகர சபைகளில் எமது உறுப்பினர்கள் அதிகாமாக வந்தால் தான் எமக்கு தேவையானவற்றறை நாமே செய்துக்கொள்ள முடியும்." என்றார்.