மிக் - 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேகநப­ராக கருதி தேடப்­பட்டு வரும் ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர்  உத­யங்க வீர­துங்க டுபாயில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவரை இலங்­கைக்கு அழைத்து வரு­வது தொடர்பில் நேற்று வரை எவ்­வித தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.  

உத­யங்க வீர­துங்­கவை நாட்­டுக்கு அழைத்து வர தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்­களே நேற்று வரை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

அவரை அழைத்­து­வர இது­வரை எந்த குழுவும் பொலிஸ் தரப்பில் அனுப்­பப்­ப­ட­வில்லை என குறிப்­பிட்ட அவர், குற்றப் புல­னா­யவுப் பிரிவு, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் இணைந்து அவரை நாட்­டுக்கு அழைத்­து­வ­ரு­வது குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

 பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

தனது மனை­வி­யுடன் அமெ­ரிக்கா நோக்கி செல்ல டுபாய் சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு உதய்ங்க வீர­துங்க நேற்று முன் தினம் வந்த போது, விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் அவரை கைது செய்து தடுத்­து­வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 

உத­யங்க வீர­துங்க, இலங்கை கடவுச் சீட்டை பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா செல்ல முற்­பட்ட நிலையில், அந்த கடவுச் சீட்­டா­னது கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் உத்­த­ர­வுக்கு அமைய இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளதால், அது தொடர்பில் அவ­தானம்  செலுத்­தியே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  நேற்று மாலை வரை, உத­யங்க வீர­துங்­கவை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பொலிஸார் எவ்­வித தீர்­மா­னத்­தி­னையும் எடுத்­தி­ருக்­க­வில்லை எனவும், டுபாய் சென்று அழைத்து வரு­வதா இல்­லையா என்று கூட முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

' இதில் பாரிய சட்ட சிக்­கல்கள் உள்­ளன. அவரை அழைத்து வரு­வது என்­பது உன்­மையில் சிக்­க­லான விடயம். அதனால் தான் இந்த விட­யத்தில் உயர் மட்ட கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­றன. இலங்­கைக்கும் டுபாய்க்கும் இடையே குற்­ற­வியல் தொடர்­பி­லான ஒப்­பந்­தங்கள் ஏதும் இல்­லாமை இந்த சம்­ப­வத்தை பொறுத்த வரை பாரிய பின்­ன­டை­வா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.டுபாய் நல்­லெண்ண அடிப்­ப­டையில் அவரை எம்­மிடம் கைய­ளித்தால் சிக்கல் இல்­லாமல் அழைத்து வரலாம். எனினும் உகேரைன் பிரஜை என்ற ரீதியில் உத­யங்க குழப்பம் விளை­வித்தால் அவரை விமா­னத்தில் ஏற்­று­வது கூட சிக்­கலை அளிக்­கலாம்.எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் உயர் மட்ட கலந்­து­ரை­யா­டலின் அடிப்­ப­டையில் டுபா­ய­யியும் நாம் தெளி­வு­ப­டுத்தி உள்ளோம். அவர்­களின் பதி­லுக்­காக தற்­போது காத்­தி­ருக்­கின்றோம்' என அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

Image result for உத­யங்­க virakesari

கைது செய்­யப்­பட்ட உத­யங்க வீர­துங்­கவை டுபாய் அதி­கா­ரிகள் விசா­ரணை செய்து, தடை செய்­யப்­பட்ட கடவுச் சீட்டில் வெளி­நாடு செல்ல முற்­பட்­டமை தொடர்பில் கைது செய்து அந் நாட்டு சட்­டத்தை நடை முறைப்­ப­டுத்த முற்­பட்­டுள்­ளனர். இதன்­போது தான் உக்ரேன் பிரஜை எனவும் அதனால் தன்னை உக்­ரே­னுக்கு நாடு கடத்­து­மாறும் இதன்­போது உத­யங்க வீர­துங்க டுபாய் குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களை கோரி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

 எனினும் அவர் வெளி நாடு செல்ல முற்­பட்ட கடவுச் சீட்­டுக்கு எதி­ரான தடை உத்­த­ரவு கோட்டை நீதி­மன்­றினால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அது இலங்­கையின்ல் இடம்­பெறும் குற்றம் ஒன்­றுடன் தொடர்­பு­டை­யது என்­ப­தாலும், சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பிடி­வி­றாந்து ( நீல அறி­வித்தல்) பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தையும் கருத்தில் கொண்டு அவரை இலங்­கை­யிடம் கைய­ளிப்­பது தொடர்பில் பேச்­சுக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

இந் நிலையில் பெரும்­பாலும் உத­யங்­கவை இலங்­கைக்கு டுபாய் நாடுகடத்தலாம் எனவும் அவ்வாறு இல்லை எனில் நிதிக் குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவரை அங்கு அனுப்பி அவரை கையேற்று வருவது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இது குறித்துள்ள சட்ட திட்ட ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நேற்றும் ஆராய்ந்திருந்தன .