நான் மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, 

மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

வவுனியா மக்களுக்கு ஒரே ஒரு அரசியல் கட்சியே சேவை செய்துள்ளதாக குறிப்பிட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வவுனியா உள்ளிட்ட வடக்கின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து, அதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை நியமித்து, கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் அரசியல் ரீதியாக மக்களை வேறுபடுத்த வேண்டாம் என வடக்கிலும் தெற்கிலுமுள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் இனம், மதம் என்ற பேதமின்றி மாவட்டத்திலுள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.