அதிகாலை மூன்று மணியளவில் வீடொன்றில் கொள்ளையிட வந்த திருடனைக் கண்ட சிறுமி கூச்சலிட, அங்கு வந்த இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடனை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று மவுண்ட்வேர்ணன்  காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவு பகுதியிலுள்ள வீடுகளில் தனது கைவரிசையைக் காட்டுவதற்காக வீடொன்றில் கொள்ளையிட வந்த திருடன் ஒருவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீடொன்றில் திருட முற்பட்ட வேளையில், திருடனை கண்ட சிறுமி ஒருவர் கூச்சலிட்டபோது, அங்கு வந்த இளைஞர்களும், பொதுமக்களும் பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடனை மவுண்ட்வேர்ணன் காட்டுப்பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர்.

இதையடுத்து திம்புள்ளை பத்தனை பொலிஸாரிடம் குறித்த திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த திருடனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் இன்று அதிகாலை திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த திருடனை சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.