கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்ட இருவரும்  கோட்டை நீதிவான் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கொள்ளுப்பிட்டி பிளவர் வீதியில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன, வௌ்ளவத்தை அர்துசா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ,அர்ஜுன் அலோசியஸ். கசுன் பாலிசேன, அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை சந்தேகநபர்களாக அறிவித்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்பி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலமளிக்குமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தொடர்புபட்டதாக கூறப்படும் சில குற்றங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. உள்ளக இரகசிய தகவல்களை பயன்படுத்தியமை, சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை அவற்றில் ஒரு குற்றமாகும்.