இந்து என்பதற்காக மகளின் காதலனைத் தாக்கி, கழுத்தில் கத்தியால் குத்தி, அவரது நாக்கையும் வெட்டிப் படுகொலை செய்த முஸ்லிம் குடும்பத்தை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அங்க்கீத் சக்சேனா (23) என்ற இந்த இளைஞர் புகைப்படக் கலைஞர். இவரும் 20 வயது கல்லூரி மாணவியான முஸ்லிம் பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக நெருங்கிப் பழகி வருகின்றனர்.

இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்குத் தெரிந்ததுடன், அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஆனால், அந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக்கொள்ளாத காதல் ஜோடி, வழக்கம் போலவே சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில், அங்க்கீத்தை அவரது வீட்டுக்கு அருகாமையில் வழிமறித்த அவரது காதலியின் தாய், தந்தை, 16 வயது சகோதரர் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் தாக்கத் தொடங்கினர்.

நிலைகுலைந்து விழுந்த அங்க்கீத்தின் நாக்கையும் அவர்கள் துண்டித்தனர்.

தனது மகன் தாக்கப்படுவதாகக் கேள்விப்பட்ட அங்க்கீத்தின் தாய், உடனே தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு ஓடிச் சென்றார். அங்கே, அங்க்கீத்தின் காதலியின் குடும்பத்தினர் மகனைத் தாக்குவதைக் கண்டு அலறினார்.

அங்க்கீத்தின் தாய் வருவதைக் கண்ட குடும்பத்தினர் அங்க்கீத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியதுடன் நாக்கையும் துண்டித்துவிட்டுத் தப்பியோடினர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அங்க்கீத் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பதியப்பட்ட புகாரின் பேரில், காதலியின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.