பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நீண்டநாட்களுக்குப் பின் குவித்துள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் சிட்டகொங்கில் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 196 ஓட்டங்களையும், டி சில்வா 173 ஓட்டங்களையும் ரொஷேன் சில்வா  109 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியில் இலங்கை அணியின் ரொஷேன் சில்வா தனது கன்னி டெஸ்ட் சதத்தைப்பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியைவிட 200 ஓட்டங்களால் முன்னிலை வகிக்க, பங்களாதேஷ் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

இன்று போட்டியின் 4 ஆவது நாள் ஆகும். பங்களாதேஷ் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.