இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தினரால் ஜப்பான் வீரர்கள் மீது போடப்பட்டு செயலிழந்த குண்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் ஹாங்காங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பல உலக நாடுகள் குழுவாக பிரிந்து மோதிக் கொண்ட போது பல உயிர்களை இந்த போர்கள் பலி தீர்த்துக் கொண்டது.

இதிலும் இரண்டாவது உலகப்போரில் மிகவும் அபாயகரமான குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் எதிரி நாடுகளில் போடப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமல் இன்னும் பூமிக்கு அடியில் புதைந்து இருப்பதாக  ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்டு செயலிழந்த ஒரு வெடிகுண்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் எடை சுமார் 1,000 பவுண்ட்கள் ஆகும். மிகவும் அபாயகரமான இந்த குண்டு ஒரு சில காரணங்களால் வெடிக்காமல் போயுள்ளது. இதனால் சுமார் 60 ஆண்டுகளாக பூமிக்கு அடியில்  புதைந்து இருந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஹாங்காங் பகுதியில் ஜப்பானை சேர்ந்த இராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். அவர்களை தாக்க அமெரிக்கா இராணுவ விமானங்கள் இந்த குண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது அமெரிக்க இராணுவத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டாகும்.

ஹாங்காங்கில் கட்டிடம் கட்ட குழி தோண்டிய போது இந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இக் குண்டை  40 பணியாளர்கள் 3 நாட்களாக  தோண்டி எடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஹாங்காங்கில் இதேபோல ஒரு குண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் மேலும் இங்கு நிறைய குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதாக ஹாங்காங் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.