(இரோஷா வேலு)

சட்டவிரோதமான முறையில் திருடிய மாடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேன் ஒன்றை விடுவிக்கக்கோரி  பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 25000 ரூபா கையூட்டல் கொடுக்க முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவராவார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சட்டவிரோதமான முறையில் திருடிய மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் பேருவளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வேன் ஒன்றை பேருவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருவளை பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போதே அதனை மீட்டுத்தரும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கோரியே இவ்வாறு 25000 ரூபா கையூட்டலை பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொடுக்க சந்தேகநபர் முயற்சித்துள்ளார். 

குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று 12.30 மணிக்கு வருகை தந்து, நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்திற்குள் நுழைந்து நிலையப்பொறுப்பதிகாரியுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு கடிதவுறையொன்றில் பணத்தை வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  கைகளுக்குள் இதனை வழங்க முயற்சித்துள்ளார். 

இதன்போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அதனுடன் இச்சந்தேநபர் தொடர்பாக இதற்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.