என்னையும், எமது கட்சியையும் கூட்டணி அமைத்து விமர்சிக்கின்றார்கள் என்றால், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். விமர்சனம் மட்டுமல்ல, பலரது கனவுகளிலும் நான் வருகிறேன் என்று எனக்கு தகவல் வருகிறதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்குளி வட்டார வேட்பாளர்கள் ராஜேந்திரன், மஞ்சுளா, முப்தி ஆகியோரை ஆதரித்து மட்டக்குளி பார்ம் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், சுயேச்சை குழுக்கள், சிறு குழுக்கள்,வேட்பாளர்கள், இலஞ்சம் வாங்கியவர்கள்  ஆகியோர் என்னையும், எமது கட்சியையும் எதிர்ப்பதில் மாத்திரம் கூட்டணி அமைத்து எம்மை விமர்சிக்கின்றார்கள் என்றால், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம்.விமர்சனம் மட்டுமல்ல, பலரது கனவுகளிலும் நான் வருகிறேன் என்று எனக்கு தகவல் வருகிறது.  எமது கட்சியை எதிர்க்கின்றதாக சொல்லி, மேடை போட்டு, நான்கு பேர், ஐந்து பேர் கூட கலந்துக்கொள்ளாத, கூட்டங்களை ஊடகங்களில் காட்டி, இவர்கள் நடத்தும் கூத்துகள் கொழும்பு, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, என சூறாவளி பிரச்சாரத்தில் பறந்து, களைத்து  திரியும் எனக்கு சிரித்து மகிழும் சந்தர்ப்பங்களை தருகிறது. இதற்காக இவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

என்னை பற்றி பேசுவதை விட்டு விட்டு போய் நான்கு நல்ல விடயங்களை, நீங்கள் தப்பித்தவறி வெற்றிபெற்று பதவிக்கு வந்தால் என்ன செய்ய போகிறீர்கள் என மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். எனக்கெதிராக பேசுவோறுக்கு தெரியாத, விளங்காத, இவர்கள் பேசாத விடயங்களை நாம் பேசுகிறோம். எடுத்து கூறுகிறோம். ஆகவே மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். என் அரசியல் அனுபவம் மூலம் இது எனக்கு புரிகிறது.

இலங்கையின் மிகப்பெரிய மாநகரம் கொழும்பு. கொழும்பு மாநகரில்தான் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், அமைச்சுகள் மற்றும் சர்வதேச தூதரகங்கள் இருக்கின்றன. இங்கேதான் இந்நாட்டின் தேசிய அரசியல் மற்றும் வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கொழும்பில் நாம் பலமான சமூகமாக  வாழ வேண்டும். இங்கு எம் அரசியல் பலம் காலத்தின் கட்டாயம். ஏணிக்கு கொழும்பில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த எதிர்பார்ப்பை சாத்தியமாக்கும். 

கொழும்பில் எழும் எம் பலமிக்க குரல், கொழும்பு வாழ் தமிழருக்காகவும் மட்டுமல்ல, நாடெங்கும் வாழும் தமிழருக்காகவும், தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் ஒலிக்கும். ஏணிக்கு கொழும்பில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த நிலைப்பாட்டை சாத்தியமாக்கும். 

1997 முதல் 2017 வரை கடந்த 20  ஆண்டுகளாக கொழும்பு மாநகரில் எமக்கு மறுக்கப்பட்டு வரும் மேயர், பிரதி மேயர் பதவிகளில் ஒன்றை நாம் இம்முறை பெறுவோம். அதன்மூலம் கொழும்பு மாநகர சபையின் அன்றாட அடிப்படை சேவைகளை நமது மக்களுக்கு மிக காத்திரமாக பெற்றுக்கொடுப்போம். ஏணிக்கு கொழும்பில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த எதிர்பார்ப்பை சாத்தியமாக்கும். 

புதிய தேர்தல் முறையின்படி முழுநகரமும் 47 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரங்களில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் உங்கள் வட்டாரத்தின் சாக்கடை, நீர், தெருவிளக்கு, வீதி செப்பனிடல் உள்ளிட்ட தேவைகளுக்கு நேரடியாக பொறுப்புக் கூறுவார்கள். அத்துடன் ஏனைய கிராமசேவகர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், பொலிஸ் மற்றும் அனைத்து அரச நிர்வாக சேவைகளையும், பெற்றுத்தரவும், பிரச்சினைகளை தீர்த்துத் தரவும் கடமைப்பட்டுள்ளார்கள். இவை அனைத்துக்கும் இடையில் வட்டாரத்தில் வாழும் மக்களுக்கும், அமைச்சரவை அமைச்சரான எனக்கும் இடையில் தொடர்பாடல் அதிகாரிகளாகவும் இவர்கள் பணி புரிவார்கள்.      

கொழும்பு மாநகரசபைக்கு, 66 உறுப்பினர்கள் வட்டார அடிப்படையிலும், 44 உறுப்பினர்கள் பட்டியலிலும் என மொத்தமாக 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள், ஆகவே கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், உங்கள் வாக்குச் சாவடிக்கு சென்று, ஏணி சின்னத்துக்கு வாக்களித்தால், ஒன்றில் வட்டார உறுப்பினர்களாக அல்லது பட்டியல் உறுப்பினர்களாக நாம் கணிசமான மாநகரசபை உறுப்பினர்களை பெற்று கொழும்பு மாநகரசபை ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவாவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.