பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின்  திட்டம் மற்றும் அபிவிருத்தி  அமைச்சர் மிர் கஜார்கான் பிஜரானி இரண்டாவது மனைவியை சுட்டுக்கொன்று  விட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

நேற்று  மதியம்  அமைச்சர் பிஜரானி  அறையில் உள்ள சோபாவில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது  மனைவியும்  அருகில்  இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  அமைச்சர்  பிஜரானியின் உடலையும் மனைவி பரீஹாவின் உடலையும்  ஜின்னா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மந்திரி பிஜரானியின் தலையில் ஒரு குண்டு பாய்ந்திருந்ததும் மனைவி பரீஹாவின் அடிவயிற்றில் 2 குண்டுகளும், தலையில் ஒரு குண்டும் பாய்ந்திருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.

மந்திரி பிஜரானி முதலில் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு அதன்பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என  ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய  வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.