தொடர்ச்சியாக 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியவர், இடுப்புக்குக் கீழ் உணர்வு அற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜியாக்ஸிங் நகரைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத இந்தச் சீனர், கடந்த 27ஆம் திகதி மாலை இணையதள நிலையம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு, இணையத்தில் ஆடப்படும் விளையாட்டை ஆடத் தொடங்கினார்.

விளையாட்டின் தீவிரத்தில் மற்ற அனைத்தையும் மறந்த அவர், மறுநாள் பிற்பகல் சிறுநீர் கழிக்கச் செல்வதற்காக எழும்ப எத்தனித்தார்.

அப்போதுதான் தனது இடுப்புக்குக் கீழ்ப்பட்ட பாகம் உணர்வற்று இருப்பதையும் தன்னால் நகர முடியாதிருப்பதையும் உணர்ந்தார்.

தகவல் தெரிந்து அங்கு வந்த நண்பர்கள் அம்பியூலன்ஸ் உதவியுடன் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர் இன்னும் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

அம்பியூலன்ஸில் ஏற்றப்படும்போதும் தான் இடைநடுவில் விட்டு வந்த விளையாட்டைத் தொடருமாறு அவர் தனது நண்பர்களைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.