இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள  பாடசாலையொன்றில் மேலதிகமாக  சாம்பார் கேட்டதற்காக சமையல்கார பெண் ஒருவர் சிறுவன் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரச பள்ளியில் சேர்த்து  படிக்க வைத்து வருகின்றனர்.

ஆனால் அரச பள்ளியில் பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யவும், ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்லியும் ஆசிரியர்கள் பலர் நிர்பந்திக்கும் அவல சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ஷாப்பூர் லுத்ரா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் தரத்தில் பயிலும் சிறுவன் ஒருவன் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட சென்றுள்ளான்.

சிறுவன் சமையல்கார பெண்ணிடம் இரண்டாவது முறையாக சாம்பார் வேண்டும் என கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சமையல்கார பெண் சிறுவன் முகத்தில் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் குறித்த சமையல்காரப் பெண்ணை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனக்கு நேர்ந்துள்ள இத்தகைய கொடுமைக்கு நீதி வேண்டி பெற்றோரும் பொது மக்களும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.