சிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் அவ்வணி நான்கு விக்கட்கள் இழப்புக்கு 374 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சிறப்பாக விளையாடிய இளம் வீரர் மொமினுல் ஹக் 176 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்திருந்தார்.

முஷ்ஃபிக்குர் ரஹீம் சதத்தைத் தொட எட்டு ஓட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் திக்வெல்லயிடம் பிடி கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கட்கள் விழுந்தவண்ணமிருந்தன.

எனினும் பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்முதுல்லா நேர்த்தியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் தலா மூன்று விக்கட்களை வீழ்த்தினர்.

தனது முதலாவது இனிங்ஸைத் தற்போது ஆட ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

ஆரம்ப ஆட்டக்காரரான திமுத் கருணாரத்ன ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.

தற்போது, குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்கின்றனர்.