விழித் திரைகள் உருளும் சத்தத்தைக்கூடக் கேட்கும் வித்தியாசமான வியாதியால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இசைக் கலைஞர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கெல்வின் எட்மண்ட்ஸ் (61) என்ற இவர் கார்டிஃப் நகரைச் சேர்ந்தவர். மிக மிக நுண்மையான ஒலியைக் கூடக் கேட்கும் ஒரு வித நோய் இவரைப் பீடித்தது. அது முதல் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்தார் கெல்வின்.

தனது இதயம் துடிக்கும் சத்தம் முதல் கண் விழித் திரைகள் உருளும் சத்தம் வரை அனைத்துத் துல்லியமான சத்தங்களும் கெல்வினுக்குக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக இரண்டு முறை சத்திர சிகிச்சைகள் செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்தார். எனினும் அவரது மனைவி காப்பாற்றிவிட்டார்.

தன்னைக் காப்பாற்றிய மனைவி மீது கோபம் கொண்ட கெல்வின் அவரைத் தாக்கியுள்ளார். இதையறிந்த பொலிஸார் கெல்வின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எனினும் தனது நோயின் தீவிரம் அதிகமாவதை உணர்ந்த கெல்வின், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.