பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க பலிக்கடாவாக்கப்பட்டிருப்பதாக சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (31) கபே அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அவ்வமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோனே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பிணைமுறி விவகாரத்தில் பெரியளவிலான நிதி மோசடி நடத்தப்பட்டுள்ளது. அதற்குப் பின்னணியில் அரசியல் புள்ளிகள் பலர் இருக்கின்றனர்.

“எனினும் களங்கத்தில் இருந்து தம்மை விலக்கிக்கொள்ளவும் தண்டனைகளில் இருந்து தப்பவும் அவர்கள் ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்கியிருக்கிறார்கள்.

“பிணைமுறி விசாரணை அறிக்கையில், அர்ஜுன் அலோஷியஸிடம் இருந்து ரவி கருணாநாயக்க சில பல வசதிகளைப் பெற்றுக்கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மூளையாகச் செயற்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக, திலக் மாரப்பன தலைமையிலான ஐ.தே.க. குழு, ரவி கருணாநாயக்கவை தியாகம் செய்துள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.