அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்களை வேரறுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இப் பிரச்சினைக்கு தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும் அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தூதர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியபோது,

“குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் தலிபான்கள் கொன்று குவித்து வருகிறார்கள். அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்களை வேரறுப்போம்” என்று தெரிவித் தார்.