(நெவில் அன்தனி)

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு எதிராக கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய மருதானை புனித சூசையப்பர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

19 வயதுக்குட்பட்ட தேசிய வீரர்களான அசேல மதுஷான் மற்றும் சமோத் ரஷ்மித்த ஆகிய இருவரும் அலாதியான கோல்களைப் போட்டு தமது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

எவ்வாறாயினும் போட்டியின் இரண்டாவது பகுதியில் மூன்று வீரர்கள் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானமை பாடசாலை கால்பந்தாட்டத்துக்கு ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை.

இப் போட்யில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதுடன் புனித பத்திரிசியார் அணி தலைகீழ் வெற்றியை ஈட்டும் என்ற கருத்தும் நிலவியது.

ஒவ்வொரு ஆட்ட நேர பகுதியிலும் தலா 40 நிமிடங்களை இப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணியினரும் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் மத்திய கள வீரர் சி. பரமான்த இடதுகோடியிலிருந்து பரிமாறிய பந்தை தனது பாதங்களால் கட்டுப்படுத்திய சமோத் ரஷ்மிக்க சுமார் 22யார் தூரத்திலிருந்து பந்தை உதைத்து அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

எவ்வாறாயினும் நான்கு நிமிடங்கள் கழித்து புனித பத்திரிசியார் அணி வீரர் டி.எச். ஹெய்ன்ஸ் சுமார் 35 யார் தூரத்திலிருந்து உயர்த்தி உதைத்த பந்து புனித சூசையப்பர் அணியின் கோல் காப்பாளர் எம். கொடிகாரவின் தலைக்கு மேலால் சென்று கோலினுள் புக கோல் நிலை சமனானது.

இதனைத் தொடர்ந்து இடைவேளை வரை இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

இடைவேளையின் பின்னர் சிறந்த வீயூகங்களுடன் வேகத்துடனும் விளைாயாடிய புனித சூசையப்பர் அணியினர் 51ஆவது நிமிடத்தில் தனி ஒருவராக பந்தை நகர்த்தியவாறு எதிரணி வீரர்களை கடந்துசென்று பந்தை கோலினுள் புகுத்தினார்.

எட்டு நிமிடங்கள் கழித்து கீழே வீழ்ந்து கிடந்த ரஷ்மிக்கவின் முகத்தில் உதைத்த புனித பத்திரிசியார் அணித் தலைவர் எஸ். அபீஷன் மத்தியஸ்தர் ஏ.ஏ. தரங்கவின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

மேலும் 6 நிமிடங்கள் கழித்து மத்திய களத்திலிருந்து அணித் தலைவர் ஜேசன் நிதேஷ் பெர்னாண்டோ மத்திய களத்திலிருந்து பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட பி. எல். பிங்கோ அதனை உடனடியாக மதுஷானுக்கு பரிமாற அவர் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி புனித சூசையப்பர் அணியின் 3ஆவது கோலை போட்டார்.

போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது இரண்டு அணிகளையும் சேர்ந்த இரண்டு வீரர்களான ஆர். சாந்தன் (புனித பத்திரிசியார்), எஸ். குநே (புனித சூசையப்பர்) ஒருவரை ஒருவர் தாக்கியதால் இருவரும் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகினர்.

இறுதிச் சுற்றுக்கு றினோன் விளையாட்டுக் கழகம் பூரண அனுசரணை வழங்கியிருந்தது.

போட்டியின் அதி சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் (16) போட்ட வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் அசேல மதுஷான் வென்றெடுத்தார். சிறந்த கோல்காப்பாளர் விருது எம். கொடிகாரவுக்கு வழங்கப்பட்டது.

ஜே. ஸ்ரீரங்கா பிரதம அதிதியாகவும் றினோன் ககழகத் தலைவர் ரொபர்ட் பீரிஸ் சிறப்பு அதிதியாகவும்  கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.

மருதானை ஸாஹிரா கல்லூரி அணியை 5 க்கு 4 என்ற பெனல்டி கணக்கில் வெற்றிகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.