தலவாக்கலையில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு எதிராக இழிவாக பேசப்பட்ட வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் மஸ்கெலியா சாமிமலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா சாமிமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை 5 மணியளவில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேடையில் இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு இவ்வாறு மக்கள் மத்தியில் உரையாற்றுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமைச்சர் திகாம்பரத்திற்கும் எதிராக அமைச்சர் எஸ்.பி. திஸநாயாக்க தலவாக்கலையில் மக்கள் மத்தியில் முன்வைத்த கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் அல்லது அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்தனர்.